கண்ணூர்: ஒரே ஒரு சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றம்வரை சென்ற ஊர்மக்களின் செயல் வியப்பை அளித்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூரின் உலிக்கல் எனும் ஊரிலுள்ள ஒரு துணிக்கடையின் கண்ணாடி முகப்பில் அந்தச் சிட்டுக்குருவி சிக்கிக்கொண்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஏப்ரல் 8) மூன்று நாள்களாக அக்குருவி அதனுள் இருந்தபடி படபடவென தன் சிறகுகளை அடித்துக்கொண்டிருக்கிறது.
அக்கடை மூடப்பட்டிருப்பதால் அக்குருவியால் அங்கிருந்து விடுபட்டுப் பறக்க முடியவில்லை.
அதன் சிறகுகள் கண்ணாடிப் பலகையால் எழுந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களும் அதே வணிக வளாகத்திலுள்ள அக்கம்பக்கக் கடைக்காரர்களும் அக்குருவியைக் காண நேர்ந்தது.
ஆயினும், நீதிமன்ற ஆணையின்படி அதிகாரிகள் அக்கடையை மூடி, முத்திரையிட்டுள்ளதால் குருவியை விடுவிக்க எவரும் முன்வரவில்லை.
குழாய் ஓட்டை வழியாக அது உள்ளே நுழைந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும், வெளியே வருவதற்கான வழி அதற்குத் தெரியவில்லை போலும் என்று அதே தெருவிலுள்ள இன்னொரு கடைக்காரர் சொன்னார்.
அங்கிருந்த சிறு ஓட்டையின் வழியாக மக்கள் தானியங்களையும் தண்ணீரையும் வழங்கி வருவதால் அவற்றின் உதவியால் அக்குருவி உயிரோடு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அதுபற்றித் தகவல் தெரிந்தும் தீயணைப்பு, மீட்புப் படையினர் குருவியை மீட்கும் முயற்சியில் இறங்கவில்லை.
“யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், நீதிமன்ற ஆணைப்படி கடை மூடி, முத்திரைப்பட்டுள்ளதால் எங்களால் செயல்பட முடியாது. நீதிமன்றம் தலையிட்டால்தான் முடியும்,” என்று அவர்கள் கூறிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, குருவியின் நிலை குறித்து நீதிமன்றத்திடம் முறையிடப்பட, குருவிக்கு விடுதலை கிடைக்கவிருக்கிறது.
“சிட்டுக்குருவி விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய முதன்மை நீதிபதியே நேரில் வரவிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது,” என்று வயத்தூர் கிராம அலுவலர் எம்.எஸ். வினீத் கூறினார்.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலகச் சிட்டுக்குருவி நாளாகக் கொண்டாடப்படுகிறது.