‘மக்கள் பலமே பெரிய பலம்’

1 mins read
52ce070f-4d0b-46c1-9c21-1500463a9078
பிரசாந்த் கிஷோர். - கோப்புப் படம்: ஊடகம்

பாட்னா: மக்கள் பலத்தைவிட பெரிய பலம் வேறு எதுவும் இல்லை என்று தேர்தல் உத்தி நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் பீகார் தேர்வாணைய பணியாளர் வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு இருந்ததாக பிரச்சினை வெடித்தது.

இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி திடலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பீகார் காவல்துறை என்னை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றது. நீதிமன்றம் எனது கோரிக்கையை ஏற்று, நிபந்தனையற்ற பிணை வழங்கியது. மக்கள் பலத்தை விட பெரிய பலம் இல்லை. இது மக்களுக்காக நாங்கள் செய்த போராட்டத்திற்கு கிடைத்த பலன்,” என்றார்.

முதலில் எனக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டது. அதை நிராகரித்து சிறைக்கு செல்லத் தயாராக இருந்தேன். ஆனால் என்னை சிறையில் அடைக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் நீதிமன்றம் நிபந்தனையற்ற பிணை வழங்கியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே பிரசாந்த் கிஷோர், உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு நீரிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செவ்வாய்க் கிழமை தகவல் வெளியாகியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்