புதுடெல்லி: விசா காலம் முடிந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கினால் இந்திய நாட்டவருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
தற்போது அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், “அனுமதிக்கபட்ட நாள்களைக் கடந்து அமெரிக்காவில் தங்கும் இந்தியக் குடிமக்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்கள்,” என்று குறிப்பிட்டு உள்ளது.
“அத்துடன், அவ்வாறு ஒருமுறை வெளியேற்றப்பட்டவர்கள் வருங்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படலாம்,” என்றும் அது தெரிவித்து உள்ளது.
விசா காலத்தைத் தாண்டி, தங்கியிருப்பவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்று அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகக் குறியேறுபவர்களுடன், அவர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒப்பிடுகிறது.
அதிபராகப் பதவி ஏற்றது முதல் குடியேறிகள் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்.
குடிநுழைவுக் கொள்கையையும் அவர் திருத்தி உள்ளார். புதிய விதிகளின்படி, அமெரிக்காவில் 30 நாள்களுக்கு மேல் தங்குவோர் கூட்டரசில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

