புதுடெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி நகரின் ஜந்தர் மந்தர் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ள பிரம்மாண்ட போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்தடைந்துள்ளார்.
கல்வி அமைச்சருக்கு எதிராகப் போராட்டம்
அண்மையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இளைஞர்களைக் ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அபிஜித் திப்கே என்பவரால் ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ என்ற பெயரில் ஒரு சமூக ஊடகப் பக்கம் தொடங்கப்பட்டது.
இந்திய இளைஞர்களிடையே இதற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இது தற்போது நீட் தேர்வுத் தாள் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
அமைதி வழிப் போராட்டம்
டெல்லி வந்தடைந்த அபிஜித் திப்கே, தனது அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் இளைஞர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “உங்கள் அனைவரையும் ஜந்தர் மந்தரில் சந்திக்கக் காத்திருக்கிறேன். வரும்போது ஒரு புத்தகத்தையும் நமது தேசியக் கொடியையும் கைகளில் ஏந்தி வர மறந்துவிடாதீர்கள்.
“மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு அன்பு, மரியாதையின் அடையாளமாகப் பூக்களை வழங்குங்கள்.
“இந்த இயக்கத்தை நாம் முற்றிலும் அன்பு, அமைதி வழியிலேயே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பலத்த பாதுகாப்பு
ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணர்வுப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் டெல்லியில் திரண்டு வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

