ப. சிதம்பரம் மீது வழக்கு தொடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ப. சிதம்பரம் மீது வழக்கு தொடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

2 mins read
69abe60a-bc31-45b1-9f5f-d230f6297760
ப. சிதம்பரம். - படம்: நியூஸ்ஆன்ஏர்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது பணமோசடி வழக்குத் தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இரு வெவ்வேறு பண மோசடி புகார்கள் தொடர்பாக, சிதம்பரம் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என இத்தகைய மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

மேலும், சிதம்பரம் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளிக்கும் மத்திய அரசின் உத்தரவு தொடர்பான ஆவணங்களும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுத்தர உதவியதாக ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஃப்ஐபிபி) கடந்த 2002ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. அப்போது ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் விவகாரத்திலும் இருதரப்புக்கும் இடையே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 800 மில்லியன் டாலர் தொகையை அந்நிய நேரடி முதலீடாகச் செலுத்த எஃப்ஐபிபி ஒப்புதல் வழங்கியதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு ப. சிதம்பரம் உதவினார் என்பதும் அந்த வகையில் இது நிதியமைச்சராக அவருக்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்பதும் அமலாக்கத்துறையின் வாதம்.

இதுதொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டு சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவை எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

தற்போது அனுமதி கிடைத்துள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்