தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுஉலைகள் அமைக்க இந்திய வம்சாவளி அமெரிக்கர் நிறுவனத்திற்கு அனுமதி

2 mins read
cbb9a509-de06-4fd9-ac46-1ba7ba413201
2008ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் அணு உலைகள் அமைக்க இந்திய வம்சாவளி அமெரிக்கரின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அமெரிக்க எரிசக்தி துறை அனுமதி வழங்கியுள்ளது.

அந்நிறுவனத்தின் நிறுவனர் கிரிஸ் பி சிங், இந்திய வம்சாவளி அமெரிக்கராவாா்.

2008ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கிட்டத்தட்ட17 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஒப்பந்தத்தின் வர்த்தக ஆற்றலை பயன்படுத்துவதற்கு இருந்த தடைகள் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததன்மூலம் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் வட்டாரத் துணை நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா, டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ், லாா்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுடன் ஓா் ஆலைக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வகைப்படுத்தப்படாத நவீன அணு உலை தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, 5 ஆண்டு கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும்.

அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் பரிமாற்றம் செய்யும் தகவலும் தொழில்நுட்பமும் அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

மேலும், ராணுவ காரணங்களுக்காக அணு ஆயுதங்களையும் அணுகுண்டுகளையும் தயாரிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் பகிரப்படும் தொழில்நுட்பம், தகவல் ஆகியவற்றைக் குறித்து அமெரிக்க எரிசக்தி துறையிடம் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் காலாண்டு அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பயனை முழுமையாக எட்டும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப் பெரிய மின்துறை பொறியியல் ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டிங் என்ஜினியா்சுடன் இணைந்து ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில பொருள்களைத் தயாரிக்க லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் ஹோல்டெக் இன்டா்நேஷனல் கூட்டு சேர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்