புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனை மீதான தற்காலிகக் கட்டுப்பாடுகளை ஜூலை 1 முதல் மீட்டுக்கொள்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்ததாலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. அதனால், இந்தியாவிற்குள் எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்க ஜூன் மாதத் தொடக்கத்தில் அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் புதிய அறிவிப்பால் அவை முடிவுக்கு வருகின்றன.
உத்தேச விநியோகப் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கையாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெட்ரோல் நிலையங்களில் வணிகக் காரணங்களுக்காக பெட்ரோலையும் டீசலையும் வாங்குவோரைத் தடைசெய்வதற்காகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பொதுமக்களுக்குப் போதிய அளவில் டீசல் கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் அன்றாட வரம்பை விதித்திருந்தனர். வளைகுடா வட்டாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்துள்ள போர் உலகளாவிய நிலையில் எரிசக்தி விநியோக நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது.
மத்திய அரசாங்கம் ஜூன் 12ஆம் தேதி கட்டுப்பாடுகளை விதித்தது. உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்தபோதிலும் சில்லறை பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. அதனால், சில்லறை விற்பனைக்கும் மொத்த விற்பனைக்கும் இடையில் விலையில் பெரிய இடைவெளி இருந்தது. இதனால், தொழில்துறையினர், வணிகர்கள், நிறுவனத்தார் ஆகியோர் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து எரிபொருளை வாங்கத் தொடங்கினர்.
இந்த வரம்புகள் காரணமாகப் பல முறைகேடுகள் நடந்தன. எரிபொருளை முறைகேடாய்த் திசைதிருப்புதல், பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்றவை அவற்றுள் அடங்கும் என்று பெட்ரோலிய அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டது. இவற்றால் நாடு முழுதும் எரிபொருள் சமமாக விநியோகிக்கப்படுவது பாதிப்புக்கு உள்ளானது.
நிலைமையைச் சமாளிக்க, வணிகர்களும் நிறுவனத்தாரும் சில்லறை எரிபொருள் நிலையங்களிலிருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்தது. அத்துடன், சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் வாங்குவதற்கு ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் என்ற உச்சவரம்பும் விதிக்கப்பட்டது.

