கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் முதற்கட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றுள்ளது.
152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது. அதில் கிட்டத்தட்ட 3 கோடியே அறுபது லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
முதற்கட்ட வாக்களிப்பில், 2 லட்சத்து 50 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்துத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின.
முர்ஷிதாபாத்தில் திரிணாமூல், ஆம் ஜனதா உன்னாயன் கட்சி மோதல்
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் அதே மாவட்டத்தில் அதிகச் செல்வாக்கு பெற்ற ஹுமாயூன் கபீரின் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டது.
இரு தரப்பும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதுடன் அங்கிருந்த காரையும் தாக்கினர்.
அந்த மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்குமுன், முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் காயமடைந்தார். ஹுமாயூன் கபீரின் கட்சிதான் இந்தத்தாக்குதலுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற ஹுமாயூன் கபீரைத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்க முற்பட்டனர். அதையடுத்து ஹுமாயூன் கபீரைக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முர்ஷிதாபாத்தின் டோம்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நஜர்புரில் உள்ள வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் திரிணாமூல் கட்சியினர் தடுத்ததாகப் புகார் எழுந்தது.
முர்ஷிதாபாத் வன்முறை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசினார் அசன்சோல் தக்ஷின் தொகுதி பாஜக வேட்பாளர் அக்னி மித்ரா.
“மம்தா பானர்ஜியின் அரசாங்கம் இதுபோன்ற செயல்களைச் செய்யும், குண்டுகளை வீசும், மின்வெட்டை ஏற்படுத்தும். அவர்கள் கேமராக்களையும் சேதப்படுத்த முயல்வார்கள்,” என்றார் அவர்.
இதற்கிடையே, கோராபஜார் வாக்குச்சாவடியில் நான்கு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியும் பிரச்சினை சரியாகவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 89.93% விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகக் கூறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி, இரண்டாம் கட்ட வாக்களிப்பு 142 தொகுதிகளில் நடைபெறும்.

