நோயாளியை நாசம் செய்த மருத்துவர் கைது

1 mins read
9f01d0bf-e68b-4add-a852-69b8d365013f
தடுக்க முயன்ற பெண்ணின் தம்பியையும் மருத்துவர் அடித்து உதைத்ததாகக் கூறப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே

முசாஃபர்நகர்: தமது மருத்துவகத்திற்குச் சிகிச்சை பெற வந்த 19 வயதுப் பெண்ணை மருத்துவரே சீரழித்த கொடுமை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியது.

முசாஃபர்நகர் மாவட்டம், போபா எனும் சிற்றூரில் சனிக்கிழமை (ஜூன் 7) இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.

தகவலறிந்ததும் அந்த மருத்துவகத்தின்முன் திரண்ட உள்ளூர்வாசிகள், முன்னாள் பாஜக வட்டத் தலைவரான அந்த மருத்துவரை நையப் புடைத்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாகத் தன் தம்பியுடன் அந்த மருத்துவகத்திற்குச் சென்றார் அந்த இளம்பெண்.

அங்குச் சென்றதும் அவரைத் தனியே உள்ளே அழைத்துச் சென்ற மருத்துவர், சோதனை என்ற பெயரில் அவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததோடு, அவரை வன்கொடுமைக்கும் ஆளாக்கினார்.

அவரது முயற்சியைத் தடுக்க அப்பெண் முயன்றார். தமக்கையின் சத்தம் கேட்டு, உள்ளே சென்ற அவரது 15 வயது தம்பியையும் மருத்துவர் அடித்து உதைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

வீர்பால் ஷெராவத் என்ற அம்மருத்துவரைக் கைதுசெய்து, அவர்மீது வழக்கு பதிந்துள்ளதாக வட்டாரக் காவல்துறை அதிகாரி ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்