பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

2 mins read
b9f40128-4aff-44bf-83e2-98df87f9e157
பக்க விளைவுகள் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டியிருந்தால் பொது மருத்துவர் ஒருவரால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 15 நோயாளிகளுக்குமேல் சேவையாற்ற இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் குறிப்பிட வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அக்கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், ஜேக்கப் வடக்கஞ்சேரி என்ற மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில், “அது நடைமுறையில் சாத்தியமில்லை,” என்று கூறி, வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) உச்ச நீதிமன்றமும் கைவிரித்துவிட்டது.

திரு ஜேக்கப் சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறித்து நோயாளிகளிடம் எடுத்துரைக்க மருத்துவர்கள் கடமைப்பட்டுள்ளனரா என்ற முக்கியமான விவகாரத்தை எனது கட்சிக்காரரின் மனு எழுப்பியுள்ளது,” என வாதிட்டார்.

ஆனால், அப்படிச் செய்யும்போது, பொது மருத்துவர் ஒருவரால் 10 முதல் 15க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சேவையாற்ற முடியாமல் போகலாம் என்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளால் ஏற்பட வாய்ப்புள்ள பக்க விளைவுகள் குறித்த விவரங்களை அச்சிட்டு வைத்துக்கொள்வது மருத்துவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று திரு பூஷண் குறிப்பிட்டார்.

மேலும், தவறான மருந்துகளைப் பரிந்துரைப்பதால் நோயாளிகளுக்குத் தீங்கு நேரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு, வெவ்வேறு நோயாளிகளுக்கு வெவ்வேறு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும் என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்ட வரம்பிற்குள் மருத்துவத் தொழிலைக் கொண்டுவந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்