பிரயாக்ராஜ்: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின்படி, மகா கும்பமேளா விழாவுக்காகத் திரண்டு வரும் பக்தர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
இதுவரை 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், “இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா விழா நடைபெற உள்ளது.
“இந்த விழாவுக்கு வருகை அளிக்கும் பக்தர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு யோகி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
“அவரது அறிவுறுத்தலின் பேரில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர். மத்திய மருத்துவமனையின் மருத்துவர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து, 24 மணிநேரமும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து வருகிறார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெற்று வருகின்றன.
45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி. அமைச்சர் ஜே.பி.எஸ்.ரத்தோர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பிரயாக்ராஜ் நகரில் வெப்பநிலை குறைந்து வருவதால், ரயில் நிலையம் மற்றும் மஹா கும்பம் பகுதிக்கு அருகில் உள்ள தேநீர் கடைகளைச் சுற்றி மக்கள் குவிந்துள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தீமூட்டி குளிர்காய்வதையும் காண முடிகிறது.

