திருவனந்தபுரம்: கேரளாவில் பூரம் விழாவின்போது மருத்துவ உதவி வாகனத்தைப் பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அளித்த புகாரின் பேரில் திரிச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ வாகனத்தைப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி விளக்கம் அளித்திருந்தார்.
முன்னதாக திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி மருத்துவ உதவி வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முதல்தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான அந்தப் புகாரில் அனைத்து மருத்துவ உதவி வாகனங்களுக்கான வழித்தடங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுரேஷ் கோபி இந்த விதிமுறைகளை மீறி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில், சுரேஷ் கோபி அவசர உதவி வாகனத்தைப் பயன்படுத்தவில்லை என்று முதலில் கூறினார். பின்னர், அதில் பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

