கடமையை மறந்து காணொளியில் மூழ்கிய மருத்துவர்; மாரடைப்பால் பெண் மரணம்

2 mins read
b24cf49c-6671-4a1c-b7f4-9be40d87c894
நோயாளியைப் பார்த்துக்கொள்ளும்படி தாதிமைப் பணியாளர்களிடம் சொல்லிவிட்டு, கைப்பேசியில் மூழ்கிய மருத்துவர். - காணொளிப்படம்: இந்திய ஊடகம்

லக்னோ: பணியிலிருந்த மருத்துவர் சமூக ஊடகக் குறுங்காணொளிகளில் (ரீல்ஸ்) மூழ்கிவிட, 60 வயதுப் பெண் ஒருவர் மாரடைப்பால் மாண்டுபோனார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரியிலுள்ள மகராஜா தேஜ் சிங் மாவட்ட மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 28) நிகழ்ந்தது.

இதனால் நோயாளியின் உறவினர்கள் கடும் கோபமடைந்தனர். இச்சம்பவம் முழுவதும் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

பிரவேஷ் குமாரி என்ற அப்பெண் கடுமையாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து, அவரை மகராஜா தேஜ் சிங் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவருடைய மகன் குருஷரண் சிங் கூறினார்.

அப்போது அம்மருத்துவமனையில் டாக்டர் ஆதர்ஷ் செங்கர் என்பவர் பணியிலிருந்தார்.

தம் தாயார் வலியால் துடித்தபோதும், டாக்டர் செங்கர் தன் இருக்கையைவிட்டு நகராமல் தமது கைப்பேசியில் இன்ஸ்டகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் குறுஞ்காணொளி பார்த்துக்கொண்டிருந்ததாக குருஷரண் குற்றஞ்சாட்டினார்.

தான் பலமுறை மருத்துவரிடம் மன்றாடியும், அவர் தாதிமைப் பணியாளர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை என்று குருஷரண் கூறினார்.

“என் தாயாரின் நிலைமை மோசமாகவே, நம்பிக்கையிழந்து நாங்கள் கூச்சலிட்டோம். அதனால் கடுப்பான டாக்டர் செங்கர், ஒருவழியாகத் தன் இருக்கையைவிட்டு எழுந்தார். ஆனாலும், என் தாயாரைப் பார்ப்பதைவிட்டு, அவர் என்னை அறைந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே என் தாயாரின் உயிர் பிரிந்துவிட்டது,” என்று குருஷரண் சொன்னார்.

இதனால் மருத்துவமனையில் பதற்றம் அதிகரிக்கவே, காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மதன் லாலும் அம்மருத்துவனைக்கு வந்துசேர்ந்தார்.

“சிசிடிவி காணொளி ஆராயப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு மதன் லால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்