ராகுல் காந்திமீது பாஜக தொண்டர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

1 mins read
4d715947-80b8-4be8-9104-69775098edf7
இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி. - படம்: ஏஎஃப்பி

லக்னோ: இந்தியாவின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர் ஒருவர் தொடுத்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்தது.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்தியக் குடியுரிமையையும் பிரிட்டிஷ் குடியுரிமையையும் வைத்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 84ஏயின்கீழ் அவருக்குத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்ற பாஜக தொண்டர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

விசாரணையின்போது, அவ்வழக்கில் இந்திய அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, வழக்கின் இறுதி விசாரணையின்போது ராகுல் காந்தி இந்தியக் குடிமகனா இல்லையா என்பது குறித்து விடையளிப்பது தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

அப்போது, திருத்தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உள்துறை அமைச்சுக்கு நீதிமன்றம் பத்து நாள் காலக்கெடு அளித்திருந்தது. குறிப்பாக, ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிரான பொதுநல மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் ராகுல் காந்திக்கு எதிராக இதே போன்றதொரு வழக்கைத் தொடுத்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்