புதுடெல்லி: நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும் இண்டிகோ நிறுவனத்தின் ஏறக்குறைய 1,200 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து பொது இயக்ககம், இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது இண்டிகோ.
இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக டிசம்பர் 3ஆம் தேதி ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தனது விமானங்களின் சேவையை அந்நிறுவனம் ரத்து செய்தது.
டெல்லி விமான நிலையத்தில் 38 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 33 விமானங்களும், அகமதாபாத்தில் 14 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறை, ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு காரணமாக 92 விமானங்களும் விமானம் மற்றும் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், விமானங்கள் ரத்தானது குறித்து பயணிகளிடம் மன்னிப்பும் கோரியது.
தொடர்புடைய செய்திகள்
விமானிகள் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தைக் கடந்து பணியாற்றும்போது களைப்படைவதை தடுக்கும் வகையில், விமானிகளின் பணி நேர விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் விமானப் போக்குவரத்து பொது இயக்ககம் கறார் காட்டி வருகிறது.
இதன் காரணமாகவே விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

