தாத்தாவின் மடியிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையைப் பிடுங்கி கடித்துக் குதறிய நாய்!

1 mins read
17 நாள்களுக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய குழந்தை
f7b3b83e-1e48-40c9-ade9-3573fff25714
நாயின் பிடியிலிருந்து குழந்தையை மீட்கப் போராடும் ஆடவர்கள். - காணொளிப்படம்
multi-img1 of 2

புதுடெல்லி: தாத்தாவின் மடியிலிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைப் பிடுங்கி, நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் இம்மாதம் 2ஆம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்தது.

அந்தக் குழந்தைக்கு 18 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அதன் காலில் மூன்று இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் 17 நாள்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சிறுமி, வெள்ளிக்கிழமைதான் (ஜனவரி 19) வீடு திரும்பினாள்.

குழந்தையை நாய் குதறிய சம்பவம் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியிருந்தது. அக்காணொளியைக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஆறேழு பேர் முயன்றும் கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரம் அக்குழந்தையை ‘பிட்பில்’ இனத்தைச் சேர்ந்த அந்நாயின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை.

இதனிடையே, அவ்வட்டாரத்தில் தெருநாய்த் தொல்லை அதிகமாக இருந்தும் அதனைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், நாய் உரிமையாளருடன் பேசி, பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளும்படி காவல்துறையைச் சேர்ந்த சிலர் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர். இச்சம்பவம் குறித்து இன்னும் வழக்கு பதியவில்லை என்றும் நாயின் உரிமையாளர் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார் என்றும் அவர்கள் கூறினர்.

‘பிட்புல்’ இன நாய்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், சிலர் அவற்றைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்