ராய்ப்பூர்: உணவு விநியோகிக்கச் சென்ற ஆடவரை வீட்டிலிருந்த நாய்கள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நிகழ்ந்தது.
அங்குள்ள அனுபம் நகர் பகுதியில் வசித்து வருகிறார் சந்தியா ராவ் என்ற மருத்துவர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அவரது வீட்டிற்கு உணவு விநியோகிக்கச் சென்றார் சல்மான்கான் என்ற ஆடவர்.
அப்போது, மருத்துவர் சந்தியாவின் வீட்டிலிருந்த மூன்று நாய்களில் இரண்டு அவரைக் கடித்துக் குதறின. இதனால், அலறியபடியே அவ்வீட்டிற்கு வெளியே ஓடி, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதேறி, நாய்களின் பிடியிலிருந்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவ, பலரும் அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். கார்மீது ஏறி அமர்ந்திருந்த சல்மானின் கை கால்களிலிருந்து ரத்தம் வழிவதை அக்காணொளி காட்டுகிறது.
சல்மானின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திடம் விவரித்த சல்மான், வேறு யாரேனும் அந்நாய்களிடம் சிக்கியிருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்றார்.
தன்னை அழைக்காமல் வீட்டிற்குள் வந்திருக்கக்கூடாது என்று மருத்துவர் சந்தியா திட்டியதாகவும் அவர் சொன்னார்.
தன் வீட்டில் நாய்கள் வளர்ப்பதாக அவர் சொல்லவே இல்லை என்றார் சல்மான்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவர் சந்தியா வளர்க்கும் இரண்டு ‘பிட்புல்’ வகை நாய்கள் இதுவரை ஐவரைக் கடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வீடு திறந்திருக்கும்போது அந்நாய்கள் சுதந்திரமாகத் தெருவில் நடமாடி வருவதாகவும் அதனால் தாங்கள் அச்சத்திலேயே இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, சல்மானின் புகாரைத் தொடர்ந்து இவ்வாரம் திங்கட்கிழமை (ஜூலை 15) அந்நாய்களைப் பிடிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் சந்தியாவின் வீட்டிற்குச் சென்றனர். ஆனாலும், அவர்கள் வெறுங்கையுடனேயே திரும்பியதாகக் கூறப்பட்டது.