புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பான் ஏறக்குறைய 10 டிரில்லியன் யென் (ஏறக்குறைய ரூ.6.49 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அவர், தோக்கியோவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
நவீன தொழில்நுட்பம், துல்லியமான பொறியியல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் ஜப்பான் அனைத்துலக அளவில் சிறந்து விளங்குவதைச் சுட்டிக்காட்டிய திரு கோயல், ஜப்பானிய தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக, ஜப்பானின் ஐச்சி பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, நாட்டின் பரந்த உள்நாட்டுச் சந்தையை மட்டுமின்றி, உலகளாவிய சந்தையையும் கைப்பற்ற வேண்டும் என வரவேற்பு தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, இணையப் பயன்பாடு குறித்துப் பேசிய அவர், ஜப்பானில் ஆகும் செலவில் வெறும் ஐந்து விழுக்காட்டுக் கட்டணத்திலேயே இந்தியாவில் தரவுச்சேவை வழங்கப்படுவதாகவும் உலகின் அதிக அளவில் பயனீட்டாளர்களாகவும் ‘சாட்ஜிபிடி’ பயன்பாட்டில் உலகளாவிய அளவில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பரந்து விரிந்த திறமையாளர்கள், அபரிமிதமான வணிக வாய்ப்புகள், 140 கோடி மக்களின் உள்நாட்டுத் தேவை ஆகியவை இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும் பலமாக உள்ளன என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
தற்போதைய நான்கு டிரில்லியன் டாலர் பொருளியலைக் கொண்டுள்ள இந்தியா, வரும் 2047ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளியலாக உருவெடுக்கும் இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறது என்றும் இளம் தலைமுறையினரின் நல்வாழ்வையும் நாட்டின் தொலைநோக்குப் பார்வையையும் மையமாகக் கொண்டு இந்த கூட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


