ஒட்டாவா: கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா மீது கனடா சுமத்திய குற்றச்சாட்டுகளில் இருந்து கனடா பின்வாங்குவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியுடனான வணிக உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மார்க் கார்னி பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கனடாவின் ஜனநாயகச் செயல்பாடுகளில் இந்தியா தலையிடுவதாக நம்பினால், பிரதமர் கார்னி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என கனேடிய ஊடகங்களிடம் ஒட்டாவா மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கனடா மண்ணில் இந்தியா அத்துமீறி செயல்படுவதாகவும் நாடுகடந்த அடக்குமுறைச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியதை அடுத்து, இருதரப்பு உறவுகளில் கசப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்துவந்த கசப்பான உறவுகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“இந்தப் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் முதிர்ச்சியான, வலுவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டுத் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு கனடாவிடம் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த இந்திய வம்சாவளி வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்டார். இதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளதாக கனேடிய அரசு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது.
ஆனால், இக்குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்த நிலையில், இருதரப்பு உறவுகள் கசந்தன. அதன் உச்சமாக இருநாடுகளில் இருந்தும் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
நிஜ்ஜார் படுகொலைக்குப் பிறகு கனடாவில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கும் கொலைக்கும் பின்னணியில் இந்தியாவுக்கும் பங்குள்ளதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாடினார்.
சீக்கியத் தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா கவலை தெரிவிக்க, இந்தியா எல்லை மீறிவிட்டதாக கனடா வெளிப்படையாகச் சாடியது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான தனது பயணத்தைத் தொடங்குகிறார் பிரதமர் கார்னி. இந்தியாவுடனான வணிக உறவுகளை ஆழப்படுத்துவதே அவரது பயணத்தின் முதன்மை நோக்கம் எனக் கூறப்படுகிறது.
கசந்த உறவுகளைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் கார்னி வருகையின்போது வணிகம், எரிசக்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கலாசாரம், தற்காப்பு ஆகிய துறைகளில் பங்காளித்துவச் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் மீது கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கார்னியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், வங்கி, சுகாதார அறிவியல், நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் 600க்கும் மேற்பட்ட கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
கனடாவில் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 2.8 மில்லியன் மக்கள் உள்ளனர். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 400,000 இந்தியர்கள் மேற்கல்வி படிக்கின்றனர் என்று கனடா அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 2025ல் பிரதமராக கார்னி பதவியேற்ற பிறகு இருதரப்பு உறவுகள் மேம்பட்டன. அதன் பின்னர் தூதரகச் செயல்பாடுகளும் தொடங்கின.

