புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350ஆக உயர்த்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.
உலக சுற்றுலா தின விழா டெல்லி வித்யா பவனில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்தியாவில் தற்போது 157 விமான நிலையங்கள் உள்ளன. ஆனால், அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்போது விமான நிலையங்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.
“அதனால், 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
“2014ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 74 விமான நிலையங்கள் இருந்தன. அப்போது, வெளிநாடுகளில் இருந்து 46 மில்லியன் பேர் இந்தியாவுக்கு வந்தனர்.
“தற்போது 157 விமான நிலையங்கள் உள்ள நிலையில் 70 மில்லியன் சுற்றுப் பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். அவர்களில் 35 விழுக்காட்டினர் சுற்றுலா, விடுமுறைகளைக் கொண்டாட இந்தியாவுக்கு வருகின்றனர்,” என்றார் ராம் மோகன் நாயுடு.