புதுடெல்லி: இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’வைப் போல் ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான போராட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு எழுச்சி முழக்கமாக ‘வந்தே மாதரம்’ இருந்தது. இப்பாடல் கடந்த 1950 ஜனவரி 24ஆம் தேதி முதல் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 52 நொடிகளுக்குள் இதைப் பாடி முடிக்க வேண்டும், தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலுக்கு இத்தகைய விதிகள் வகுக்கப்படவில்லை.
எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது என்றும், ஆனால் அதற்குரிய கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு நிறைவையொட்டி, தேசிய கீதத்திற்குள்ள அதே நெறிமுறைகளை தேசியப் பாடலுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விதிகளை ‘வந்தே மாதரம் பாடலுக்கு’ நீட்டிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

