விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

டெல்லி உள்ளிட்ட நான்கு நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புக்குத் திட்டம்

2 mins read
985b5aac-6e60-446a-9166-be2d459ad49e
டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் பல நகரங்களில் காவல்துறை வாகனச் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: கடந்த நவம்பர் 10ஆம் தேதி திங்கட்கிழமை டெல்லி செங்கோட்டையில் நடந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் குண்டு வெடிப்பு குறித்து புலனாய்வு முகமையின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வட இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நான்கு நகரங்களில் எட்டு சந்தேகப் பேர்வழிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சதித்திட்டத்தை காவல்துறை முறியடித்துள்ளது.

மொத்தம் 8 பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 4 நகரங்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தாக்குதல் நடத்த அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நகரங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவினர், இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதும், 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்ததையும் புலனாய்வு முகமை கண்டுபிடித்துள்ளது.

டெல்லி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் அதிக அளவில் உயிர்ச்சேதம் உண்டாக்கும் வகையில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக மருத்துவர்கள் முசாமில், அதீல், உமர், ஷாஹீன் ஆகியோர் ஒருங்கிணைந்து ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதாகவும், செங்கோட்டை தாக்குதலுக்கு முன்னதாக திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தத் தொகையை உமரிடம் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது.

குருகிராம், நுஹ் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து 2,000 கிலோ என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) வெடிபொருள்களை ரூ. 3 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி நவீன வகை வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் தேவையான வெடிபொருள்களை மறைத்து வைத்து எடுத்துச் செல்வதற்கு பழைய வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தனர். டெல்லி குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ள டாக்டர் உமர் பயன்படுத்திய i20 வாகனத்தைப் போலவே சிவப்பு நிற ஈக்கோஸ்போர்ட் உட்பட மேலும் மூன்று பழைய வாகனங்கள் தாக்குதல்களுக்குத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சந்தேகப் பேர்வழிகள், மருத்துவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கான இறுதி நாள் குறிக்கப்படுவதற்கு முன், ஜம்மு - காஷ்மீர் காவல்துறை ஏராளமான சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்தது. அவர்களில் மருத்துவர் முசாமிலும் ஒருவர். அவ்வகையில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தேசிய அளவில் நடக்கவிருந்த கொடூரமான தாக்குதல்களை முறியடித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் இந்த சந்தேகப் பேர்வழிகளை காவல்துறை கைது செய்யவில்லையெனில், இந்தியாவின் நான்கு, ஐந்து இடங்களில் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவங்களை அவர்கள் அரங்கேற்றியிருப்பர் என்று காவல்துறை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்