300 இந்தியர்களுடன் தரையிறக்கப்பட்ட விமானம்; ஆட்கடத்தல் முயற்சியா என சந்தேகம்

1 mins read
032a2fdf-32da-4f66-b55d-c21336284f1f
ருமேனியாவின் ‘லிஜெண்ட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ340 விமானத்தில் 303 இந்தியப் பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. - படம்: லிஜெண்ட் ஏர்லைன்ஸ்

புதுடெல்லி: நிகராகுவாவிற்கு 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் சென்ற தனியார் விமானம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது.

ஆட்கடத்தல் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பிரெஞ்சுக் காவல்துறையினர் ஆடவர் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்திய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, நிலைமையை ஆராய்ந்து வருவதாக ‘என்டிடிவி’ செய்தி தெரிவித்தது.

ருமேனியாவின் ‘லிஜெண்ட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஏர்பஸ் ஏ340 விமானத்தில் 303 இந்தியப் பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

அது, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து (யுஏஇ) பறந்து சென்றபோது, இடையில் பிரான்சின் வட்ரி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) தரையிறங்கியது. அவ்விமான நிலையம் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், அவ்விமானம் வழியாக ஆட்கடத்தல் இடம்பெறுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவ்விமானம் நிறுத்தப்பட்டது.

அவ்விமானப் பயணிகள் மத்திய அமெரிக்காவிற்குச் சென்று, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவிற்குள் நுழையத் திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, தாங்கள் எந்தத் தவற்றையும் செய்யவில்லை என நம்புவதாக லிஜெண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் லிலியானா பக்கயாக்கோ கூறினார்.

அத்துடன், பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் நிலைமை சரியாக ஒரு சில நாள்களில் விமானம் புறப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் பிரெஞ்சு ஊடகத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்