புதுடெல்லி: கடந்த 2025ஆம் ஆண்டு நிகழ்ந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கை விசாரித்துவரும் இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, விபத்து தொடர்பான விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசைக் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 11) கேட்டுக்கொண்டது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான துஷார் மேத்தா, விபத்து குறித்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் விரைவில் இறுதி அறிக்கை தயாராகிவிடும் என்றும் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் சில பாகங்களைச் சோதனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருந்ததால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும் திரு மேத்தா கூறினார்.
இதனிடையே, விபத்தில் இறந்த தலைமை விமானி சுமீத் சபர்வாலின் 88 வயதான தந்தை புஷ்கராஜ் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், மத்திய அரசு விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இறந்த தலைமை விமானி சுமீத் குறித்து தேவையற்ற அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விபத்து நடந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் மகன் மீதான குற்றச்சாட்டின் சுமையை தந்தை சுமக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டனர்.
முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே வெளிப்படையான, நியாயமான, தொழில்நுட்ப ரீதியான சிறப்பான விசாரணையை உறுதிசெய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று புஷ்கராஜ் சபர்வால் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, தலைமை விமானியே விபத்துக்குக் காரணம் என்று குறைகூறும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, 260 பேரைக் காவு வாங்கிய இந்த விபத்து குறித்த விரிவான இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டுமென இந்திய அரசும் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் கேட்டுக்கொண்டன.
இதையடுத்து, மூன்று வார அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

