தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான விபத்து: மன்னிப்பு கோரிய டாடா குழுமத் தலைவர்

2 mins read
d4cc3b23-26ac-4246-82a3-7837d3580578
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

விபத்து குறித்து மத்திய அரசின் உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏர் இந்தியா விபத்துக்காக தம்மை மன்னிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்தக் கடினமான தருணத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. டாடா குழுமத்தின் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

“விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். விமான விபத்துக்குள்ளான பிறகு, மனித தவறுகள், விமானத்தின் இன்ஜின், பராமரிப்பு குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன,” என்று குறிப்பிட்டுள்ள அவர், ஏர் இந்தியா விமானங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் வலதுபுற இன்ஜின் கடந்த மார்ச் மாதம்தான் புதிதாக பொருத்தப்பட்டுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

விமானத்தின் இரு இன்ஜின்களும் சிறப்பாகச் செயல்படும் நிலையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

“கேப்டன் சபர்வால் 11,500 மணிநேரமும், சக விமானி குந்தர் 3,400க்கும் கூடுதலான மணிநேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் இருவரும் சிறந்த விமானிகள் என்று மற்ற விமானிகள் மூலம் அறிந்துள்ளேன்.

“எனவே, உடனடியாக எந்த முடிவுக்கும் நாம் வர முடியாது. கறுப்புப் பெட்டி, பதிவான தரவுகளின் அடிப்படையில்தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே, அது வரையில் காத்திருப்போம்,” என்றார் சந்திரசேகரன்.

பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், விமானம் பறப்பதற்கு விமானப் போக்குவரத்துத்துறை அனுமதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், முதற்கட்ட விசாரணை முடிவுகளும் விவரங்களும் தெரிய ஒரு மாதம் ஆகக்கூடும் என்றார்.

கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் விமானம் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்ட சில விநாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 274 பேர் பலியாகினர்.

குறிப்புச் சொற்கள்