புதுடெல்லி: சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானபோது அதிலிருந்து அரபிக் கடலில் கொட்டிய நெகிழித் துகள்களில் 21 விழுக்காடு மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வாரியம் விரிவான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி அரபிக் கடலில், கேரளாவின் ஆலப்புழா, கோட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் ‘எம்எஸ்சி எல்சா’ என்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
அக்கப்பலில் 1,836 டன் நெகிழித் துகள்கள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவை அனைத்தும் கடலில் கொட்டிவிட்டன. இதையடுத்து, அவற்றை மீட்கும் பணியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பேரளவில் மேற்கொண்டது. கேரளா மட்டுமின்றி, குமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடலோரப் பகுதிகளில் ஒதுங்கிய நெகிழிப் பொருள்களைச் சேகரித்து வந்தனர். எனினும், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 398 டன் நெகிழிப் பொருள்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது.
கடந்த மார்ச் 17ஆம் தேதி வரையிலான நிலவரம் குறித்து அவ்வாரியம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில், 1,400 டன்னுக்கும் அதிகமான நெகிழித் துகள்கள் அரபிக் கடலில் கலந்துவிட்டன என்றும் இதனால் கேரளா மட்டுமல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் வளத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த நெகிழித் துகள் விவகாரம் மீன்களின் உணவுச் சங்கிலியைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடல்வாழ் உயிரினங்கள் இந்தத் துகள்களைத் தங்களது முட்டைகள் அல்லது உணவு எனத் தவறாகக் கருதி உட்கொள்ளும்போது அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும் என்றும் பேரளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மீன்வளம் குறையும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் நீண்டகால அடிப்படையில் இந்தப் பாதிப்புகள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 371 டன் எரிபொருள் எண்ணெய்யும் கடலில் கலந்துவிட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அந்தக் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்திடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக ரூ. 1,227 கோடி இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

