இந்தியா: அடுத்த ஆண்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வரலாம்

இந்தியா: அடுத்த ஆண்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வரலாம்

2 mins read
5ea7642c-1264-4331-a95b-43fbe97fb390
10 ரூபாய், 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து எல்லா நோட்டுகளும் படிப்படியாக பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் என்று தகவல் பரவுகிறது. - கோப்புப் படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய், 20 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதற்கான திட்டத்தின் முதற்கட்டமாக, ரூபாய் நோட்டுகளை தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களைப் பெறுவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கு ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள எல்லா ரூபாய் நோட்டுகளையும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றும் திட்டத்தின் முன்னோட்டமாக 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

இந்த நோட்டுகளின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் முழு வெற்றி கிடைத்தால் அடுத்த ஆண்டிலேயே எல்லா நோட்டுகளையும் பிளாஸ்டிக்காக மாற்றுவதற்கான முயற்சி தொடங்கப்படலாம் என்றும் ‘தைனிக் பாஸ்கர்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.

இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் துணை நிறுவனமான ‘பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்’, ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் பதிக்கப்பட்ட ஒளிபுகா பிளாஸ்டிக் தாள்களை வழங்குமாறு உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 இறுதிநாள் என்றும் அது தெரிவித்துள்ளது.

இரு பக்கமும் அச்சிடக்கூடிய பிளாஸ்டிக் பணத்தாள்கள் உத்தேச அளவாக 68,000 ‘ரீம்’கள் கோரப்பட்டுள்ளது.

10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளுக்குத் தலா 34,000 ‘ரீம்’கள் ஒதுக்கப்படும் என்றும் ஒவ்வொரு ரீமிலும் 500 தாள்கள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்