பங்குச்சந்தை முறைகேடு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு

2 mins read
0ef4630f-8a9a-4723-b81b-60d2332902e1
போலி கருத்துக்கணிப்பால் பங்குச் சந்தையின் சரிவு மற்றும் முதலீட்டாளர்களின் இழப்பு குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு மற்றும் செபி அமைப்புக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு மற்றும் போலியான கருத்துக்கணிப்பு மூலம் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு பங்குச் சந்தையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில நாள்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அல்லது செபி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்குப் பதில் அளித்த பாஜகவின் பியூஷ் கோயல், இதுபோன்ற குற்றச்சாட்டு, முதலீட்டாளர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான சதி வேலை என்று ராகுல் காந்தியைச் சாடியிருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய அவசர இடைக்கால மனு ஒன்றை வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் பங்குச் சந்தையின் சரிவு மற்றும் முதலீட்டாளர்களின் இழப்பு குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு மற்றும் செபி அமைப்புக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை தொடர்பாக முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த அவசர இடைக்கால மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘செபி’ அமைப்பு மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர இடைக்கால மனுவை வரும் வாரம் உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்