புதுடெல்லி: ஏமனில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அனைத்துலக நடவடிக்கை மன்றம் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
விசாரணையின் முடிவில், நிமிஷா பிரியாவுக்கு 2020ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023ல் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் பிரியாவுக்கு சட்டபூர்வமாக உதவ அனைத்துலக நடவடிக்கை மன்றம் சார்பில் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் உச்ச நீதி மன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலையானார்.
அப்போது, நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்கான அரசதந்திர வழிகளை மத்திய அரசு விரைந்து ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கு ஜூலை 14ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தது.
இந்த வழக்கில், ஷரியத் சட்டத்தின்கீழ் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் குற்றவாளி மன்னிக்கப்படலாம். இந்த முறையைப் பின்பற்றி கேரள மாநிலத்தின் தாதியர் பிரியாவை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.