தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீக்கப்பட்ட 6.5 மில்லியன் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

2 mins read
85c35470-0938-4a18-9ade-abd30332e45f
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை தொடர்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தொகுப்பை ஆகஸ்ட் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும் விவரங்களையும் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ஏடிஆர்) இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பீகார் தொடங்கி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை நடத்த கடந்த ஜூலை 24ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தொகுப்பை ஆகஸ்ட் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூலை 25ஆம் தேதிக்குள் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள் மட்டுமே பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அவ்வகையில், பதிவுசெய்த 7.89 கோடி வாக்காளர்களில் 7.24 கோடி வாக்காளர்கள் மட்டுமே அப்படிவத்தைத் தாக்கல் செய்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியபின் பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலையும் இம்மாதம் 1ஆம் தேதி ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில், சட்டமன்றத் தொகுதிகள், அவற்றின் பகுதி அல்லது வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள், நீக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் 22 பேர் இறந்துவிட்டனர், 35 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர் அல்லது அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏழு லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்திருந்தனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று கட்சிகளின் வாக்குச்சாவடிநிலை முகவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் (EPIC), வாக்காளர்களை நீக்கியதற்கான காரணங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்ததாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், சில கட்சிகளின் வாக்குச்சாவடிநிலை முகவர்களுக்கு வழங்கப்பட்ட அப்பட்டியலில், வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று ஏடிஆர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்த தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. அவ்வமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முன்னிலையாகிறார்.

இந்நிலையில், ஏடிஆர் அமைப்பு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. அத்துடன், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் குறித்த விவரங்களையும் ஆணையம் தாக்கல் செய்யும்படியும் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அறிவுறுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்