புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
தாக்குதல் திட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் உளவுப்பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது ஏழு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அனிஸ் தியாகி, மோகித், தீபக் அக்ரொலா, ஆசிப், ஜதன், சபீர் உள்ளிட்ட ஏழு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதங்கள், பண உதவி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் உத்தரவின் பெயரில் டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவை பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லை வழியாக டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுதங்களுடன் பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள்களும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஏழு பயங்கரவாதிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

