புதுடெல்லி: இந்திய மேடை நகைச்சுவைக் கலைஞர் முனாவார் ஃபரூக்கியைக் கொல்லும் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ரோகித் கொடாரா பிரார்-விரேந்தர் சரன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவ்விருவரும் பானிபட் பகுதியைச் சேர்ந்த ராகுல், ஹரியானாவின் பிவானி பகுதியைச் சேர்ந்த சாகில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜைத்பூர்-கலிண்டி குஞ்ச் சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசித்துவரும் ரோகித் கொடாரா, அவர்களுக்கு உத்தரவுகளை அளித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. ரோகித் கொடாரா, இருவருடனும் சேர்ந்து ஃபரூக்கியைக் கொல்லத் திட்டம் தீட்டியதாக நம்பப்படுகிறது.
அந்தக் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் ஃபரூக்கியின் நடவடிக்கைகளை மும்பை, பெங்களூர் நகரங்களில் கண்காணித்து வந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
நியூ ஃபிரண்ட்ஸ் காலனி என்ற பகுதிக்கு அருகே சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்த பிறகு காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முனாவார் ஃபரூக்கி, 2024 பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார். இன்ஸ்டகிராம் தளத்தில் அவருக்கு 14.2 மில்லியன் ரசிகர்கள் (followers) உள்ளனர்.

