சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம். மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.70% விழுக்காடும் மாணவர்கள் 93.16 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வியாழன் காலை 9 மணியளவில் வெளியாகின.
மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையத்தளங்கள் வழியாக தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றித் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.