பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம்: 24 மணி நேரத்தில் 155,000 பேர் பதிவு

1 mins read
7dc31614-09f5-4943-82a1-75bc220d98b8
இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் 12 மாத உள்ளகப் பயிற்சிபெற இளையர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் (internship) திட்டத்திற்கான பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் 155,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துவிட்டனர்.

அதற்கான பதிவு கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 5 மணிக்கு இணையத்தளம் வாயிலாகத் தொடங்கியது. 125,000 பேரை ஈர்க்க வேண்டும் என இலக்கு வகுக்கப்பட்டதாக இந்தியப் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சு தெரிவித்தது.

21 முதல் 24 வயதிற்குட்பட்ட இளையர்கள் ‘www.pminternship.mca.gov.in’ என்ற இணையத்தளம் வழியாக அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சு அறிவித்திருந்தது.

இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் தேதியிலிருந்து அந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் தொடங்கவுள்ளது. ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.5,000 என 12 மாதங்களுக்கு நிதியுதவியும் ஒருமுறை மட்டும் ரூ.6,000 மானியமும் வழங்கப்படும்.

எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, போக்குவரத்து, விருந்தோம்பல், தானியங்கி உள்ளிட்ட 24 துறைகளில் 80,000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கடந்த வாரம் அந்த இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த முன்னோடித் திட்டம் குறித்து 2024 வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கு ரூ.800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் 12 மாத வேலைப் பயிற்சிபெற இளையர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

நியாயமான முறையிலும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் உள்ளகப் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அது முழுக்க முழுக்க தொழில்நுட்ப அடிப்படையில் இடம்பெறும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்