'ஆர்ஆர்ஆர்' தெலுங்குத் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதை வென்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்ற 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படக் குழுவினருக்கு தமது மனமார்ந்த பாராட்டுகளை திரு மோடி தெரிவித்துக்கொண்டார்.
"அருமை! 'நாட்டு நாட்டு' பாடல் உலகளவில் பிரபலமடைந்துவிட்டது. வரும் எத்தனையோ ஆண்டுகளுக்கு இப்பாடல் பலரது மனங்களில் ஒலிக்கும்.
"இந்த உயரிய விருதுக்காக எம். எம்.கீரவாணிக்கும் சந்திரபோஸுக்கும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்," என்று திரு மோடி டுவிட்டரில் பதிவிட்டார்.
'ஆர்ஆர்ஆர்' குழுவினரின் சாதனையால் நாடே பெருமை கொள்வதாக திரு மோடி மேலும் கூறினார்.
ஆஸ்கார் விருதை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கும் அவருடைய குழுவினருக்கும் திரு மோடி புகழாரம் சூட்டினார்.
ஒரே மேடையில் இரு இந்தியத் தயாரிப்புகள் ஆஸ்கார் விருதுகளை வென்றிருப்பது இதுவே முதன் முறை.

