திருமணங்களை இந்தியாவிலேயே நடத்துங்கள்: பிரதமர் மோடி

1 mins read
b7a3c5fb-a1e4-430f-a658-923f9dd5d1b4
வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியர்கள் தங்களது திருமண நிகழ்வுகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி தமது 107ஆவது ‘மனத்தின் குரல்’ உரையின்போது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“திருமண விழாக்கள் என்று வரும்போது ஒரு விஷயம் நீண்டகாலமாக என்னைக் கவலைகொள்ளச் செய்கிறது.

‘இந்தியர்கள் வெளிநாட்டில் தங்களது திருமண நிகழ்வுகளை வைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இது தேவைதானா? இந்திய மண்ணில், இந்திய மக்களுக்கு இடையே, திருமண விழாக்களை நாம் கொண்டாடினால், பணம் இங்கேயே இருக்கும். உங்களது திருமணங்களில் கலந்துகொண்டு சேவையாற்ற இங்குள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்,” என்று மோடி சொன்னார்.

இந்தியாவில் இப்போது திருமண விழாக் காலம். இந்தத் திருமண விழாக் காலத்தில் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி அளவிற்குத் தொழிலும் வணிகமும் நடக்கும் என்று சில தொழில் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், திருமண நிகழ்வுகளுக்காக உள்ளூர்த் தயாரிப்புகளையே வாங்கும்படி இந்திய மக்களுக்குப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இவையெல்லாம் இந்தியப் பொருளியலுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

மேலும், ஒரு மாதகாலத்திற்கு மின்னிலக்கப் பணப் பரிமாற்றங்களையே மேற்கொள்ளுமாறும் ரொக்கமாகக் கொடுத்துப் பொருள் வாங்க வேண்டாமென்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், அதுகுறித்த தற்படங்களை ஒரு மாதத்திற்குப்பின் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் தமது உரையின்போது 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்