புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் புதுடெல்லியில் கிட்டத்தட்ட ரூ.11,000 கோடி (1.76 பில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்ட இரண்டு முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) திறந்து வைக்கிறார்.
துவாரகா விரைவுச்சாலையின் டெல்லி பகுதி, நகர்ப்புற விரிவாக்கச் சாலை–II (யூஇஆர்.–II) இன் ஒரு பகுதி ஆகியவை, தலைநகரைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணங்களை துரிதப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
நண்பகல் 12.30 மணிக்கு டெல்லியின் ரோகினி வட்டாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, திட்டங்களை நேரில் பார்வையிடுவார்.
“உலகத்தரத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்கி, குடிமக்களின் வாழ்வை எளிதாக்கி, தடையற்ற சுதந்திரமான பயணத்தை உறுதிசெய்யும் பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தையே இத்திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன,” என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
10.1 கிலோமீட்டர் நீளமுடைய துவாரகா விரைவுச்சாலையியின் டெல்லிப் பகுதி, கிட்டத்தட்ட ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
யஷோபூமி மாநாட்டு மையம், டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் நீல மற்றும் ஆரஞ்சு வழித்தடங்கள், இனி அமையவிருக்கும் பிஜ்வாசன் ரயில் நிலையம், துவாரகா பேருந்து முனையம் ஆகியவற்றிற்கு இந்த நெடுஞ்சாலை பல்வேறு போக்குவரத்து இணைப்புகளை வழங்குகிறது.