கன்னியாகுமரி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை சனிக்கிழமை (ஜூன் 1) நிறைவுசெய்தார்.
முன்னதாக, விவேகானந்தர் பாறையில் அவர் நின்று சூரிய நமஸ்காரம் செய்தார். அதற்காக கிழக்கு முகமாக நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, சூரிய உதயத்தின்போது எழுந்து நின்று வணங்கினார். அப்போது காவி உடை அணிந்திருந்த அவர், பின்னர் மண்டபத்திற்கு சென்று தியானத்தைத் தொடர்ந்தார்.
மண்டபத்துக்கு அருகேயுள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்புப் பாதுகாப்புக் குழுவுடன் கடலோரக் காவல் படையும் அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் அனைத்துலக விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, இந்திய நேரப்படி மாலை 4.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியைச் சென்றடைவதாக எதிர்பார்க்கப்பட்டது.

