புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் வீட்டில் நடந்த பிள்ளையார் வழிபாட்டில் கலந்துகொண்டுள்ளார். இது நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே), உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அந்த வழிபாடு குறித்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய தொப்பியை அணிந்துள்ளதைக் காண முடிகிறது. பிரதமர் மோடி இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
“அரசியலமைப்பு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய உரையாடல் நீதித்துறையின் நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உள்ளாக்கும்,” என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ரவுத், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள் இந்த வகையில் அரசியல்வாதிகளைச் சந்திப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பும் என்பதே எங்களுடைய கவலை. இப்போதைய மகாராஷ்டிர அரசு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்பு விசாரிக்கப்படவுள்ளது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக உள்ளார். இப்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற ஐயமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தலைமை நீதிபதி, அந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சஞ்சய் ரவுத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடியை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியை அளிக்கிறது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் அரசியலமைப்பின் வரம்புக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்துறைக்கும், நீதித்துறைக்கும் இரு கைகள் எட்டும் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான இந்திரா ஜெய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடுள்ள பதிவில், “தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கண்டிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

