புதுடெல்லி: ஜம்மு பாஷ்மீரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். செப்டம்பர் 14ஆம் தேதி அவர் ஜம்முவில் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி, குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். அவர் அடுத்த கட்டமாக ரஜோரி, பூஜ் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்கிறார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் பிரசாரம் செய்தார். ராம்பன், பனிஹால் ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.
மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்க இருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் 370ஆவது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக அரசால் ரத்து செய்யப் பட்டது. அதையடுத்து காஷ்மீரின் மாநிலத் தகுதியும் பறிக்கப்பட்டது. காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் முறையாக காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் பாஜக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து 51 இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 32 தொகுதியிலும் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தர்ஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.
காஷ்மீருக்கு மாநிலத்தகுதி
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 4ஆம் தேதியே ஜம்மு - காஷ்மீரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக காஷ்மீர் மாநிலத் தகுதியைப் பற்றி பேசி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு முன்பே காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், பா.ஜ.க விரும்பவில்லை. தேர்தல்தான் முதலில் நடக்க வேண்டும் என்று விரும்பியது.
ஆனால், பா.ஜ.க விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். காங்கிரஸ் கட்சி, மற்ற இண்டியா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மாநிலத் தகுதி கிடைப்பதை உறுதி செய்வோம்,” என்று ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் விதிகளை மீறியதன் தொடர்பில் அரசு ஊழியர்கள் ஐவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிராக 96 வழக்குகளும் அரசு ஊழியர்களுக்கு எதிராக 53 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் அவற்றில் 86 புகார்கள் ஆதாரமற்றவை அல்லது தவறானவை என்பது கண்டறியப்பட்டு, அவை கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

