புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் புருணைக்கும் சிங்கப்பூருக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு மோடி, புருணைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மூன்று, நான்காம் தேதிகளில் அவர் புருணைக்குப் பயணம் மேற்கொள்வார். செப்டம்பர் நான்கு, ஐந்தாம் தேதிகளில் திரு மோடி சிங்கப்பூர் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று அவர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
“இந்தியா-சிங்கப்பூர் உத்திபூர்வப் பங்காளித்துவத்தின் முன்னேற்றத்தைத் தலைவர்கள் இருவரும் பரிசீலிப்பர். இரு தரப்பும் அக்கறை கொண்டுள்ள வட்டார, உலக விவகாரங்களைப் பற்றியும் அவர்கள் கருத்து பரிமாறிக்கொள்வர்,” என்று வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்தியாவுக்கும் புருணைக்கும் இடையே அரசதந்திர உறவு தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்நிகழ்வு அனுசரிக்கப்படும் வேளையில் புருணை தலைவரும் மாமன்னருமான ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று திரு மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.