தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீர் தாக்குதலில் 28 பேர் பலி; ‘மோடியிடம் போய்ச் சொல்’ எனச் சவால்விட்ட பயங்கரவாதி

3 mins read
a8adffb7-f0f2-40f6-9a2a-653fdcd901b0
சுற்றுப்பயணிகளைக் காப்பாற்ற தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு விரையும் இந்திய ராணுவ வீரர்கள். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 4

புதுடெல்லி: காஷ்மீரில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான பெஹல்கம்மில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மாண்டோர் அனைவரும் சுற்றுப்பயணிகள். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் அதில் அடங்குவர் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்தியக் கடற்படை அதிகாரியும் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், தமது மனைவி, பிள்ளைகள் கண்முன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கேரள உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் நூலிழையில் உயிர் தப்பியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தி ரிசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு தாக்குதலை நடத்தியது.

பயங்கரவாதிகள் வனப்பகுதி வழியாகச் சுற்றுப்பயணிகள் இருந்த இடத்துக்கு வந்ததாகவும் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குதிரையில் சவாரி செய்து பேன்ஸ்‌ராம் பள்ளத்தாக்கு எனும் இயற்கை எழில்மிகு இடத்தைச் சுற்றுப்பயணிகள் அடைந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.

சுற்றுப்பயணிகள் பலர் தங்கள் குடும்பங்களுடன் அங்கு சென்றிருந்தனர்.

பெண்கள், பிள்ளைகள் இருப்பதைக்கூட பார்க்காமல் பயங்கரவாதிகள் அவர்களை வேட்டையாடினர்.

பயங்கரவாதி ஒருவர் தமது கணவரை அணுகி அவர் இஸ்லாமியரா அல்லது இந்து சமயத்தவரா என்று கேள்வி எழுப்பியதாகச் சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த ஆடவர் முஸ்லிம் அல்ல என்று தெரிய வந்ததும் அவரை அந்தப் பயங்கரவாதி அவரது குடும்பத்தாரின் கண்முன்னே சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கணவரைச் சுட்டுக் கொன்றுவிட்டதால் இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறி தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றுவிடுமாறு அந்தப் பயங்கரவாதியிடம் அப்பெண் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அந்தப் பயங்கரவாதி, “மோடியிடம் போய்ச் சொல்” என்று கூறிச் சென்றதாக அப்பெண் இந்திய ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.

காயமடைந்தோர் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.

தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாண்டோரின் குடும்பத்தினருக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார்.

பயங்கரவாதிகளின் தீய நோக்கம் நிறைவேறாது என்றார் அவர்.

தாக்குலுக்குக் காரணமானவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு விரைந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரன் ரிஜிஜுவும் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் சுற்றுப்பயணத்துறை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அதன் பொருளியல் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தடம் புரளச் செய்யவே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெஹல்காம் தாக்குதல்!

*** பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் அச்சம் காரணமாக, அங்கிருந்து வெளியேற முண்டியடிக்கின்றனர்.

*** இதற்கிடையே, பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று பயங்கரவாதிகளின் வரைபடங்களை காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டது. பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

*** பயங்கரவாதத் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் பெஹல்காம் தாக்குதல் உள்நாட்டில் இருந்தே வளர்க்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

*** சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, பெஹல்காம் தாக்குதலை அடுத்து, உடனடியாக நாடு திரும்பினார். டெல்லியில் தரையிறங்கியதும், விமான நிலையத்திலேயே அவர் அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மூத்த அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.

*** தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக ஜம்மு, காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்