மேம்பாலத்திலிருந்து ஸ்கூட்டர்களைக் கீழே வீசிய பயணிகள் (காணொளி)

2 mins read
75d2c047-8ba9-481d-9ee0-8c2587978466
மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கிவீசப்படும் ஸ்கூட்டர். - காணொளிப் படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: அண்மையில் மேம்பாலத்திலிருந்து சிலர் ஸ்கூட்டர்களைக் கீழே தூக்கி வீசிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரு ஊரகக் காவல்துறை அந்நிகழ்வு தொடர்பில் தனித்தனியாக இரு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10.45 மணியளவில், என்எச்48 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஒன்றில் சாகசம் செய்த இரு மோட்டார்சைக்கிளோட்டிகளை 10-15 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி, அவர்களின் ஸ்கூட்டர்களை மேலிருந்து தூக்கி வீசினர். அவர்கள் அனைவரும் ஆத்திரத்தில் இருந்ததைக் கண்டதும் அச்சத்தில் அவ்விரு மோட்டார்சைக்கிளோட்டிகளும் அங்கிருந்து தப்பியோடினர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவலானதை அடுத்து, காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

அச்சம்பவத்துடன் தொடர்புடைய குறைந்தது 15 பேரைக் காவல்துறை அடையாளம் கண்டது.

மேம்பாலத்தில் சாகசம் புரிந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் பாலத்திலிருந்து வெளியேறும் வழியில் காவல்துறையினர் இருந்ததைக் கண்டதும் தமது வாகனங்களை வந்த திசையிலேயே திருப்பியதாகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சி.கே. பாபா கூறினார்.

“அவர்கள் போக்குவரத்திற்கு எதிர்த்திசையில் வாகனம் ஓட்டி வந்தனர். அதனால் அவ்வழியே சென்ற மற்ற பயணிகள் அச்சமடைந்தனர். அவர்களில் சிலர், அந்தச் சாகசக்காரர்களை இடைமறித்து, அவர்களின் ஸ்கூட்டர்களைப் பறித்து, பாலத்திலிருந்து கீழே தூக்கி எறிந்தனர்,” என்று அவர் விவரித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதே நேரத்தில், இருதரப்பினரையும் அடையாளம் கண்டுவிட்டதாகவும் அவ்விரு ஸ்கூட்டர்களைப் பறிமுதல் செய்துவிட்டதாகவும் திரு பாபா தெரிவித்தார்.

அதே நாளில், சாலையில் வாகனத்தில் சென்றபோது சாகசம் புரிந்ததாகக் கூறி, பெங்களூரு ஊரகக் காவல்துறை ஐந்து வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்