புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இளையர்கள் நடத்திய போராட்டங்களின்போது, காவல்துறையினர் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் கொந்தளித்துப்போன ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் இளையர்களும் அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
இந்தியக் கல்வியமைச்சர் பதவி விலக வலியுறுத்தித் தொடங்கிய அந்தப் போராட்டம், நாளடைவில் வேலைவாய்ப்பின்மை, இளையர்களுக்கான வாய்ப்புக் குறைபாடு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிரான இயக்கமாக உருவெடுத்தது.
அப்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக மட்டுமே பலத்தைப் பயன்படுத்தியதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அக்கூற்றை மறுத்துள்ள ‘ஆம்னெஸ்டி’ அமைப்பு, டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள், கண்ணீர்புகைக் குண்டுகள், தடியடி, மின்சார அதிர்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி அடக்குமுறையை ஏவியதாகக் காவல்துறை மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
பீகாரின் சிவான் மாவட்டத்தில் காவல்துறையினர் தன்னிச்சையாக உயிர்க்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்திய சம்பவங்களையும் ஆம்னெஸ்டி உறுதிப்படுத்தி உள்ளது.
“அனைத்துலகச் சட்டம், தரநிலைகள், உள்நாட்டுக் காவல் வழிகாட்டுதல்களை மீறும் வகையில் அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
“போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கற்களை வீசிய சம்பவங்கள் நடந்ததாகவும் ஆனால், காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கை என்பது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் செயல் எனக் கூறி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறை,” என்றும் ஆம்னெஸ்டி கூறியது.
நீதிமன்ற விசாரணை, அரசியல் தாக்கம்
அண்மையில், இந்திய உச்ச நீதிமன்றம் காவல்துறை, போராட்டக்காரர்கள் ஆகிய இருதரப்பு வன்முறைகள் குறித்தும் விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெல்லட் குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளையருடன் டெல்லி காவல் நிலையத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆளும் அரசின் மீதான அதிருப்தியையும் இளையர்களின் வேலைவாய்ப்பின்மை குறித்த கவலையையும் வெளிப்படுத்திய இந்த மாணவர் போராட்டம், நடப்பு ஆட்சிக்காலத்தின் மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


