பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா விழா ஜனவரி 13ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கலந்துகொண்டுள்ள பக்தர்களுக்கு வழங்கப்படும் பண்டாரா எனும் சமூக விருந்து உணவில் திருநீறு போன்ற சாம்பலைக் கலக்கியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று பரவியதை அடுத்து, வியாழனன்று (ஜனவரி 30) ஒரு காவல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
“சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியை அடுத்து, சோரான் காவல் நிலைய அதிகாரி பிரிஜேஷ் குமார் திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என கங்கா நகரைச் சேர்ந்த துணை காவல் ஆணையர் (டிஜிபி) குல்தீப் சிங் குணாவத் தெரிவித்தார்.
காணொளிக் காட்சிகளில், ஒரு காவல் அதிகாரி அடுப்பில் தயாரிக்கப்படும் உணவில் சாம்பல் சேர்ப்பதைக் காணமுடிகிறது.
எக்ஸ் சமூக ஊடகத்தில் வலைத்தளவாசி ஒருவர் இந்தக் காணொளியை வெளியிட்டு, இந்த ‘வெட்கக்கேடான செயலுக்கு’ அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து, சோரான் காவல் நிலைய அதிகாரி பிரிஜேஷ் குமார் திவாரி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கங்கா நகரின் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பொதுமக்கள் இதைக் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.
“மகா கும்பமேளாவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருபவர்களின் நல்ல முயற்சிகள் அரசியல் விரோதம் காரணமாக பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்,’’ என்று முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தி உள்ளார்.