கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை அன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து குற்றவியல் வழக்குகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டது.
ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ், தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்திலிருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே ஈஷா யோகா மையம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கோவை ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
இதன் தொடர்பில் ஈஷா அறக்கட்டளை செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 1) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஈஷா யோகா மையம் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ, துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தித் தள்ளவோ செய்வதில்லை. இம்மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. இந்நிலையில், இரண்டு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஈஷா யோகா மையம் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது.
ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் வேளாண் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர். அவருக்கு 42 வயதிலும், 39 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர்.