கோல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி வீட்டில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாகக் காவல் துறையினர், சனிக்கிழமை (ஜூன் 13) சோதனை நடத்தினர்.
மேற்கு மெதினிபூரின் சல்போனி காவல் நிலையத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தொடுக்கப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 3 மணி வாக்கில் தொடங்கிய அந்தச் சோதனை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்பட்டது.
இத்தகவல் அறிந்த மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுக்குள் நுழைவதற்காகக் காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்ததாக திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அபிஷேக் பானர்ஜி வீட்டில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் எந்தப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
அண்மையில், மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், தலைமைக் கொறடா நியமனத்தில் மம்தா பானர்ஜி முடிவுக்கு எதிராகக் கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
இதையடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவில் எம்எல்ஏக்களின் கையொப்பங்கள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் குற்றச்சாட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த சிஐடி அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியிடம் கடந்த வியாழக்கிழமை தீவிர விசாரணை நடத்தினர். அந்தச் சம்பவம் நடந்த சில நாள்களில் தற்போது மீண்டும் புது வழக்குத் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

