அமிர்தசரஸ்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலுள்ள ஒரு சீக்கியக் கோவில்மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் திங்கட்கிழமை (மார்ச் 17) காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
கோவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மறைவிடத்தைக் கண்டறிந்த காவல்துறை, அவர்களைப் பிடிப்பதற்காக அங்கு சென்றதாகப் பஞ்சாப் காவல்துறைத் தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
அப்போது, குற்றவாளிகளில் ஒருவர் சுட்டதில் தலைமைக் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஆய்வாளர் நூலிழையில் உயிர்தப்பியதாகவும் அவர் சொன்னார்.
அதனையடுத்து, காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் குற்றவாளிகளில் ஒருவர் காயமுற்றார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய கூட்டாளி ஒருவர் அங்கிருந்து தப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
மாண்டவர் பால் எனும் சிற்றூரைச் சேர்ந்த குர்சிடாக் சிங் என்பதும் மாயமானவர் ராஜசன்சி எனும் ஊரைச் சேர்ந்த விஷால் என்பதும் தெரியவந்தது.
இம்மாதம் 15ஆம் தேதி காலை மோட்டார்சைக்கிளில் அந்த வழிபாட்டுத் தலத்திற்குச் சென்ற அவ்விருவரும் அதன் முதலாம் மாடியில் கையெறிகுண்டை வீசினர். அதனால், குறிப்பிடும்படியான அளவிற்கு அந்தக் கோவில் கட்டடம் சேதமடைந்தது. அதனுள் இருந்தவர்கள் எவரும் காயமடையவில்லை.