சக காவலரின் நான்கு வயது மகளைச் சீரழித்த காவல் உதவி ஆய்வாளர் கைது

1 mins read
e6f660a0-4d50-4415-8c41-0f2288dc4d06
மாதிரிப்படம்: - ஊடகம்

ஜெய்ப்பூர்: காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், சக காவலரின் நான்கு வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டத்தில் நிகழ்ந்தது.

வேறோர் இடத்தில் பணிபுரிந்து வந்த அந்த உதவி ஆய்வாளர், தேர்தல் பணிக்காக ரகுவாஸ் காவல் நிலையத்தில் பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டார்.

பணியின்போது சக காவலர் ஒருவரின் வாடகை அறைக்கு அவர் சென்றார். அருகில் வசிக்கும் இன்னொரு காவலரின் நான்கு வயது மகள் அந்த அறைக்கு விளையாட வந்தார்.

ஆனால், அந்த உதவி ஆய்வாளர் அச்சிறுமியை ஆசை காட்டி அறைக்கு அழைத்துச் சென்று சீரழித்துவிட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அச்சிறுமி தன் தாயிடம் கூறியதை அடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குமுன் திரண்டு போராடினர். அதன்பின் அந்த உதவி ஆய்வாளர்மீது குழந்தைப் பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்கு பதியப்பட்டது.

அச்சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அந்த உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்