ஓடிக்கொண்டிருந்த வேனிலிருந்து குதித்து 16 பேரின் உயிரைக் காத்தார்

1 mins read
d8cc77c9-a723-40eb-8a22-171c175f0c67
காவல்துறையில் சேர்வதற்கு முன்பு திரு ரெட்டி 20 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றி இருந்தார். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

காவல்துறை அதிகாரியின் துணிகரச் செயலால் 16 பேரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) காலை நிகழ்ந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 16 பேர் இருந்த காவல்துறை வேன் மேம்பாலச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது.

மேம்பாலச்சாலையை வேன் கடந்த சிறிது நேரத்தில், அதன் ஓட்டுநர் ரமேஷ், 58, என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சிறிதுநேரம் சுயநினைவை இழந்தார்.

"மூன்று காவலர்களும் நானும் வேனின் பின்னால் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமர்ந்திருந்தோம். ஓட்டுநருக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த நான், ஓடிக்கொண்டிருந்த வேனிலிருந்து குதித்தேன்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உதவி ஆய்வாளர் எஸ்.கருணாகர் ரெட்டி கூறினார்.

வேனுடன் சேர்ந்து ஓடிய அவர், ஓட்டுநரின் கதவைத் திறந்து, தமது கையால் பிரேக்கை அழுத்தி, ஸ்டீரிங் வீலை இடதுபுறம் திருப்பினார். மெதுவாக இடதுபுறம் திரும்பிய வேன், சாலையோரம் இருந்த பூந்தொட்டிமீது மோதி நின்றது.

"ஓட்டுநர் ரமேஷை நாங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அவரது உயிருக்கு இப்போது ஆபத்து இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று திரு ரெட்டி கூறினார்.

இச்சம்பவத்தில் திரு ரெட்டிக்கும் காவலர் ஒருவருக்கும் இலேசான காயம் ஏற்பட்டது.

காவல்துறையில் சேர்வதற்கு முன்பு திரு ரெட்டி 20 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றி இருந்தார்.